சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தை அதிகாரிகள் தற்காலிகமாக சரி செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் சார்பில் சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் நத்தத்தில் இருந்து திருப்பத்தூர் வரை சாலையை விரிவாக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சிங்கம்புணரி பேருந்து நிலையம் அருகில் சுமார் 2 அடி அகலம் மற்றும் 6 அடி ஆழத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து பள்ளத்தில் வாகன ஓட்டிகள் விழாமல் இருப்பதற்காக சமூக ஆர்வலர்கள் அதனை சுற்றி கற்களை அடுக்கி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் தற்காலிகமாக அந்த பள்ளத்தில் மண் மற்றும் கற்களை போட்டு மூடியுள்ளனர்.