கைக்குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள மருக்காலங்குளம் கிராமத்தில் பெரிய பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தங்க செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திக் என்ற மகனும், கனுஷ்கா என்ற 4 மாத கைக்குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் 4 மாத கைக்குழந்தையுடன் தங்க செல்வி திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். இதனையடுத்து செல்லதுரை என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் தங்க செல்வி உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை உறவினர்கள் பார்த்துள்ளனர்.
மேலும் குழந்தைக்கு கனுஷ்கா தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தங்க செல்வியையும், கனுஷ்காவின் சடலத்தையும் மீட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கனுஷ்காவை கிணற்றில் வீசி கொன்று விட்டு தங்க செல்வி தற்கொலைக்கு முயற்சி செய்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.