ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்போவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருக்கும் நிலைமை குறித்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா பிரித்தானியா போன்ற 21 நாடுகள் சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழலை உலக நாடுகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் ஆப்கானில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமியரின் சுதந்திரம், கல்வி, வேலை போன்ற பொதுவான உரிமைள் பற்றி மிகுந்த கவலையளிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தலீபான்கள் அமைப்பினர் சார்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் கூறியதாவது “பெண்கள் சுகாதார துறையிலும் மற்ற துறைகளிலும் வேலை செய்ய அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கு இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் உரிமைகள் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் நிலைமையை குறித்து ஆலோசனை நடத்த ஜி7 மாநாடு விரைவில் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனும் முன்னதாகவே கூறியிருந்தனர். இதனை தற்போது அதிகாரப்பூர்வமாக போரிஸ் ஜான்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் “வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி ஜி7 நாடுகளின் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். அந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து பேசப்படும். மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவதற்காகவும், அங்குள்ள நெருக்கடியை தவிப்பதற்காகவும், அந்நாட்டு மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.