கிணற்றில் விழுந்த பந்தை எடுக்க முயன்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாயில்பட்டி பகுதியில் கண்ணன் என்பவர் பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகின்றார். இவருக்கு 17 வயதுடைய ஹரி பிரசாத் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சிவகாசியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 11 – ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இதனை அடுத்து கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டதால் ஆன்லைன் மூலமாகவே ஹரிபிரசாத் கல்வி பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டிற்கு அருகில் இருக்கும் மைதானத்தில் ஹரி பிரசாத் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த மைதானத்தில் உள்ள கிணற்றில் பந்து எதிர்பாராதவிதமாக விழுந்துவிட்டது. இதனால் பந்தை எடுப்பதற்காக ஹரி பிரசாத் கிணற்றில் குதித்துள்ளார். இந்நிலையில் அவர் நீண்ட நேரமாகியும் தண்ணீரிலிருந்து வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் ஹரி பிரசாந்தின் தந்தைக்கும், தீயணைப்புத்துறை வீரர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி ஹரிபிரசாத்தை சடலமாக மீட்டனர். இதனை அடுத்து காவல்துறையினர் ஹரிபிரசாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.