நியாய விலை கடைகளுக்குச் சென்று ரேஷன் பொருட்கள் வாங்க இயலாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இனி அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
ரேஷன் கடைகளில் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான படிவத்தை நியாயவிலை கடைகளில் பெற்று பூர்த்தி செய்து அவர்களிடம் பொருட்களை வழங்க வேண்டும். இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “நியாயவிலை கடைகளுக்கு வர முடியாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அங்கீகரிக்கப்பட்ட நபர்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி பொருட்களை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
எனினும் இந்த உத்தரவை நியாய விலை கடை ஊழியர்கள் பின்பற்றுவதில்லை என்று புகார்கள் வந்துள்ளதால், இனி அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் பொருள்களை பெறுவதற்கான படிவத்தை நியாயவிலை கடைகளிலேயே பூர்த்தி செய்து அவர்களிடம் பொருட்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொது விநியோக திட்டத்தை சாராத பொருள்களை எந்த காரணத்தை கொண்டும் விற்பனை செய்ய வற்புறுத்தக் கூடாது எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.