செயற்கை மணல் தயாரிக்கப் பயன்படுத்துகின்ற குட்டையில் 2 சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பச்சூர் செத்தமலை பகுதியில் சென்னையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரி என்ற மகன் இருந்துள்ளார். இவர் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களான கோகுல்ராஜ் மற்றும் தனுஷ்ராஜ் ஆகியோருடன் சேர்ந்து ரயில் தண்டவாளம் அருகாமையிலிருக்கும் செயற்கை மணல் தயாரிக்கப் பயன்படுத்துகின்ற குட்டையில் குளிக்க சென்றுள்ளனர். இதனை அடுத்து அந்த குட்டையில் 15 அடி உயரத்துக்கும் மேலாக தண்ணீர் இருந்திருக்கிறது. இதனை அறியாமல் ஹரி மற்றும் அவரின் நண்பர்கள் குட்டையில் இறங்கி குளித்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற ஹரி மற்றும் தனுஷ்ராஜ் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோகுல்ராஜ் கிராமத்திற்கு சென்று தகவல் தெரிவித்து அவர்களை அழைத்துச் சென்றுள்ளார். அதன்பின் கிராம மக்கள் குட்டையில் 2 சிறுவர்களையும் தேடியுள்ளனர். பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் படி காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குட்டையில் மூழ்கிய 2 சிறுவர்களை சடலமாக மீட்டுள்ளனர். பிறகு அவர்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் போது சிறுவர்களின் உறவினர்கள் திடீர் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் செயற்கை மணல் தயாரிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதனால் காவல்துறை சூப்பிரண்டு பழனிசெல்வம் விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பின்னர் அவர் சமாதானம் கூறிய பிறகு அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து செயற்கை மணல் தயாரிப்பதற்காக குட்டை அமைத்து வைத்திருந்த ராஜாவையும் அவரின் மகனான பிரபு என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.