ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டிலுள்ள மாவட்டம் ஒன்றில் ஆண்களும், பெண்களும் ஒன்றாக சேர்ந்து கல்வி பயில கூடாது என்ற புதிய விதிமுறையை அமலுக்குக் கொண்டு வந்துள்ளார்கள்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றியதால் அந்நாட்டில் அவர்களுடைய ஆட்சியே நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் தலிபான்களின் முக்கிய தலைவர்கள் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து ஆண்களும், பெண்களும் சேர்ந்து கல்வி பயில்வது தொடர்பாக கலந்து பேசியுள்ளார்கள்.
இந்நிலையில் தலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய பின் கூறிய முதல் கட்டளையாக ஆப்கானிஸ்தானிலுள்ள ஹெராத் மாவட்டத்திலிருக்கும் தனியார் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பெண்களும், ஆண்களும் சேர்ந்து கல்வி பயில கூடாது என்று கூறியுள்ளார்கள். மேலும் இது குறித்து தலிபான்கள் கூறியதாவது, நாட்டில் நடக்கும் அனைத்து கெடுதல்களுக்கும் ஆணிவேராக ஆண்களும், பெண்களும் ஒன்றாக சேர்ந்து கல்வி பயில்வதாகதான் இருக்கிறது என்று கூறியுள்ளார்கள்.