குடிக்கு அடிமையான ஒருவர் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடிக்கு அடிமையாகிய சங்கர் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதில் குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்து கொண்டிருக்கும் போது வீட்டில் இருந்த உருட்டு கட்டையால் மனைவியை தாக்கியுள்ளார். அதன்பின் அக்கம்பக்கத்தினர் அவரின் மனைவியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து குடிபோதையில் இருந்த சங்கர் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அதற்கு பிறகு அவர் வீட்டின் உள்ளே சென்று அங்கிருந்த பொருட்களை தீ வைத்து எரித்துள்ளார். அதில் வீடு முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீட்டிற்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்ற சங்கரை வலை வீசி தேடி வருகின்றனர்.