அமெரிக்க பாதுகாப்பு படை வீரர் ஒருவர் சுட்டெரிக்கும் வெயிலில் தாகத்தில் தவிக்கும் குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுத்த காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். அதனால் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் வசம் சென்றுள்ளது. மேலும் முக்கிய நகரமான காபூலையும் தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் உயிருக்கு பயந்த மக்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனால் காபூல் விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் மக்கள் கூட்டம் அலைமோதி வருவதால் அங்கு பரபரப்பான சூழல் தொடர்ந்து நீடித்து கொண்டே வருகின்றது. இதனையடுத்து காபூல் விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் அலைமோதும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா, பிரித்தானியா உட்பட வெளிநாட்டு இராணுவத்தினர், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் மற்றும் தலீபான்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து சில நாட்களாக காபூல் விமான நிலையத்தில் நடந்த கொடூர சம்பவங்களின் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வேதனையை ஏற்படுத்தி வரும் நிலையில் முதன்முறையாக மனிதாபிமான காட்சி ஒன்று வெளியாகி மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது சுட்டெரிக்கும் வெயிலில் இரண்டு நாட்களாக ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மக்கள் பலர் தங்கள் குழந்தைகளுடன் காபூல் விமான நிலையத்தின் நுழைவுவாயிலில் காத்திருக்கின்றனர். மேலும் விமான நிலையத்தை சுற்றிலும் குப்பைகளாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் காபூல் விமான நிலையத்தின் உள்ளே செல்ல சுட்டெரிக்கும் வெயிலில் தாகத்துடன் காத்திருக்கும் ஆப்கானிஸ்தான் குழந்தைகளுக்கு அமெரிக்க பாதுகாப்பு படை வீரர் ஒருவர் குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த காட்சியை பார்த்த பலர் பாதுகாப்பு படையினரின் மனிதாபிமான செயலை பாராட்டி வருகின்றனர்.