சீமானின் செயல்பாடுகள் எதுவும் அரசியல் கட்சித் தலைவர் செய்வதுபோல் இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
சென்னை வந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டார். இது இந்தியாவை மீளாத் துயரில் ஆழ்த்தியது. இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட ராஜிவ் காந்தியை கொச்சைப்படுத்தி விக்கிரவாண்டியில் சீமான் பேசியது கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் தலைவர்களை இழிவாகவும் பேசிவருவது சீமானின் பழக்கமாக உள்ளது.திரைப்பட இயக்குநராக இருந்து அரசியலுக்கு வந்த சீமான் மற்ற தலைவர்களை விமர்சனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
நாட்டிற்காகத் தியாகம் செய்து பயங்கரவாதத்திற்கு பலியான தலைவர்கள் பலர் இருந்துள்ளனர். ராஜிவ் காந்தி படுகொலை கொடூரமானது. சீமானை எதிர்த்து தமிழ்நாடு, புதுச்சேரியில் போராட்டம் நடந்துவருகிறது. மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துகளை அவர் தொடர்ந்து பேசிவருகிறார். சீமானின் செயல்பாடுகள் எதுவும் ஒரு அரசியல் கட்சித் தலைவர் செய்வதுபோல் இல்லை” என்றார்.மேலும், புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், அவர் வெற்றிபெறுவார் எனவும் நாராயணசாமி கூறினார்.