மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இந்த வழக்கு குறித்து கடந்த 13ஆம் தேதி உதகை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கை முதலில் இருந்து விசாரிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது .இதற்கு நீதிமன்றமும் அனுமதி அளித்து இந்த வழக்கில் முக்கிய தொடர்புடைய சயனிடம் காவல்துறையினர் ரகசிய விசாரணை நடத்தினர்.
இதில் சயன் கிட்டத்தட்ட 3 மணி நேரம் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த ரகசிய வாக்குமூலம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்த வழக்கில் தன்னையும் சேர்க்க சதி நடப்பதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டி வருகிறார். இந்த நிலையில் இந்த ரகசிய வாக்குமூலம் 27ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது .இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அதிமுகவைச் சேர்ந்த சில முக்கிய பிரமுகர்கள் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் இபிஎஸ், சசிகலா உள்ளிட்டவர்களை விசாரிக்க கோரி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தீர்ப்பு சதீசன், தீபு, சந்தோஷ்சாமி தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவருடைய வழக்கறிஞர் கே.விஜயன் கூறுகையில் இந்த வழக்கு தொடர்பாக சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள 103 பேரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.