அபுதாபி பட்டத்து இளவரசருக்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் நன்றி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் அமெரிக்காவின் சார்பில் சுமார் 17,000 ஆப்கானியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அதில் முக்கியமாக அமெரிக்கா ராணுவ அதிகாரிகளுடன் பணியாற்றியவர்கள், மொழிபெயர்ப்பாளராக இருந்தவர்கள் போன்றோர் மீட்கப்பட்டுள்ளனர். அதிலும் தலீபான்கள் நாட்டைக் கைப்பற்றிய பிறகு தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதி அமெரிக்கா ராணுவத்திடம் அடைக்கலம் புகுந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் ராணுவ விமானம் மூலம் அமெரிக்கா படையினர் நாட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர்.
இதுவரை 2500 அமெரிக்கா வாழ் குடிமக்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் போன்றோர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த மீட்பு பணியின் போது அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ராணுவ விமானங்களானது அமீரகத்தின் வழியே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் அவர்களே விமானங்களில் எரிபொருளை நிரப்பியும் அனுப்பினர். இந்த மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் நன்றி தெரிவித்துள்ளார். அதற்காக அபுதாபி பட்டத்து இளவரசரான ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இது குறித்து அமெரிக்கா அதிபர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நாங்கள் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். அமெரிக்கா குடிமக்கள் மற்றும் தூதரக அதிகாரிகளை ஆப்கானில் இருந்து மீட்பதற்கு அமீரகம் எங்களுக்கு பெரிதும் உதவியுள்ளது. அவர்களுக்கு எங்களின் நன்றிகளை கூறிக்கொள்கிறோம். மேலும் வலுவான நட்புறவுக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார். இதே போன்று ஸ்பெயின் நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செசும் அபுதாபி பட்டத்து இளவரசரை தொலைபேசியில் அழைத்து நன்றி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.