கலைஞருக்கு நினைவிடம் கட்டப்படும் என்ற அறிவிப்பை அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் மனதார வரவேற்கிறோம் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் உரையாற்றினார்.. அப்போது அவர், என் பாதை சுயமரியாதை, தமிழ் நெறி காக்கும் பாதை.. 13 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கலைஞர்.. தோல்வி அவரை தொட்டதே இல்லை, வெற்றி அவரை விட்டதே இல்லை.. இன்று நாம் பாக்கும் தமிழ்நாடு கலைஞர் உருவாக்கியது. 5 முறை முதலமைச்சராக இருந்து தமிழ் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் திட்டத்தை வகுத்தவர்.
மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே விதி எண் 110ன் கீழ் கலைஞருக்கு 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி செலவில் நினைவிடம் அமைக்கப்படும். கலைஞரின் அரும்பணிகளை போற்றும் விதமாக அவரின் வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை இந்த தலைமுறையினரும் அறியும் வகையில் விளக்க படங்களுடன் நினைவிடங்கள் இருக்கும் என்று தெரிவித்தார்..
இந்த அறிவிப்புக்கு பின் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பி.எஸ் பேசுகையில், கலைஞருக்கு நினைவிடம் கட்டப்படும் என்ற அறிவிப்பை அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் மனதார வரவேற்க கடமைப்பட்டுள்ளோம். அவரின் வசனத்தில் அனல் பறக்கும், பின்னடைவில் உள்ள சமூகத்தை முன்னேற்ற அது எப்போதும் துணை நின்றுள்ளது.
50 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கருணாநிதி. பல்வேறு சிறப்பு மிக்க சட்டங்களை கொண்டு வந்தவர். கலைஞருக்கு நினைவிடம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றி. வரலாற்றில் கலைஞரின் பெயர் நிலைத்து நிற்கும். முழுமனதோடு ஒருமனதாக வரவேற்கிறோம் என்று கூறினார்..