சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டியில் 100 வெற்றிகளைப் பதிவு செய்த இரண்டாவது கேப்டன் என்ற சாதனையை இந்தியாவின் ’லேடி சச்சின்’ மித்தாலி ராஜ் படைத்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட்டின் சச்சின் என அழைக்கப்படுவர் மித்தாலி ராஜ். 20 ஆண்டுகளாக இந்திய அணிக்காக தனது அயராத பங்களிப்பைத் அளித்துவருகிறார். இதன்மூலம், 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடும் ஒரே வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார் மித்தாலி. இவர் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின்போது, பிசிசிஐ இவரை கெளரவித்தது.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 248 ரன்கள் இலக்குடன் விளையாடிய இந்திய அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் மித்தாலி ராஜ் 66 ரன்கள் அடித்தன் மூலம், ஒருநாள் போட்டியில் சேஸிங்கில் 3000 ரன்கள் அடித்த முதல் வீராங்கனை என்ற மைல்கல் சாதனையைப் படைத்தார்.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. மித்தாலி ராஜ் கேப்டன்ஷிப்பில் இந்திய அணி ஒருநாள் போட்டியில் வெல்லும் 80ஆவது வெற்றி இதுவாகும். அதேசமயம், இவரது கேப்டன்ஷிப்பின் கீழ் இந்திய அணி 17 டி20 போட்டிகளிலும், மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றியை ருசித்துள்ளது.
இதன் மூலம், சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 100 வெற்றிகளைப் பதிவு செய்த இரண்டாவது கேப்டன் என்ற பெருமையை மித்தாலி ராஜ் பெற்றுள்ளார். இவருக்கு முன்னதாக, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் சார்லோட் எட்வர்ட்ஸ் இச்சாதனையை படைத்தார். இவர் தனது கேப்டன்ஷிப்பில் இன்னும் நான்கு வெற்றிகளை பெற்றால், ஒருநாள் போட்டியில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த முதல் கேப்டன் என்ற சாதனையையும் படைப்பார்.
இந்திய அணிக்காக 10 டெஸ்ட் போட்டிகளில் 663 ரன்களும், 206 ஒருநாள் போட்டிகளில் 6808 ரன்களும், அதேபோல 89 டி20 போட்டிகளில் 2364 ரன்களும் மித்தாலி ராஜ் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டியில் அதிக வெற்றிகளை பதிவு செய்த முதல் ஐந்து கேப்டன்களின் விவரம்:
- சார்லோட் எட்வர்ட்ஸ் (இங்கிலாந்து) – 142 வெற்றிகள்
- மித்தாலி ராஜ் (இந்தியா) – 100 வெற்றிகள்
- மெக் லானிங் (ஆஸ்திரேலியா) – 96 வெற்றிகள்
- பெலின்டா கிளார்க் (ஆஸ்திரேலியா) – 87 வெற்றிகள்
- சுசி பேட்ஸ் (நியூசிலாந்து) – 79 வெற்றிகள்