ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்தன. இதனை தொடர்ந்து தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று முதல் செப்டம்பர் 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 163 நாடுகளில் இருந்து 4,537 வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். மொத்தம் 22 விளையாட்டுகளில் 540 போட்டிகள் நடைபெற உள்ளது.
பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 54 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. இவ்வளவு அதிகமானோர் இதற்கு முன்பு கலந்து கொண்டது கிடையாது. கடந்த 2016ல் ரியோ பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதலில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கம் வென்றார். தமிழக வீரர் மாரியப்பன் தொடக்க விழா அணிவகுப்பின் போது தேசிய கொடியை ஏந்தி செல்வார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பாராலிம்பிக் துவக்க விழாவில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாரியப்பன் தங்கவேலுடன் விமானத்தில் பயணித்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், மாரியப்பன் தங்கவேலுவுக்கு தொற்று இல்லை என முடிவுகள் வந்தாலும், என் எச்சரிக்கை நடவடிக்கையாக துவக்க விழாவில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடக்க விழா அணிவகுப்பில் மாரியப்பனுக்கு பதில் தேக் சந்த் தேசியக் கொடி ஏந்தி அணிவகுப்பில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.