இந்திய கிரிக்கெட் வீரர் தோனி இன்னும் இளம் வீரரைப்போலதான் செயல்படுகிறார் என சிஸ்கே வீரர் வாட்சன் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த திருவேற்காடு பகுதியில் இயங்கிவரும் வேலம்மாள் பள்ளியில் புதிய கிரிக்கெட் மைதானம் திறப்பு விழாவும், பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் இன்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக ஆஸ்திரேலிய கிரிகெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான ஷேன் வாட்சன் கலந்துகொண்டார்.
அவருக்கு மாணவர்கள் நடனமாடியும், பூங்கொத்து வழங்கியும் உற்சாக வரவேற்பளித்தனர். இதையடுத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு வாட்சன் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். மேலும் மாணவர்களுடன் கேள்வி-பதில் முறையில் கலந்துரையாடினார்.
பின்னர் தோனியின் ஓய்வு குறித்து செய்தியாளர்கள் வாட்சனிடம் கேள்வி கேட்டனர். அதற்கு வாட்சன், ” தோனி தனக்கு என்ன தேவையோ அதை சரியாக செய்துவருகிறார். அவர், இப்போதும் சிறப்பான ஃபார்மில்தான் உள்ளார். என்னை பொறுத்தவரையில், அவர் இளம் வீரர்களைப் போலதான் கிரிக்கெட் விளையாடுகிறார். ரன் ஓடும் போதும் சரி, விக்கெட் கீப்பிங்கிலும் சரி மிகவும் வேகத்துடன்தான் செயல்படுகிறார்.
ஐபிஎல் தொடரிலும், உலகக்கோப்பைத் தொடரிலும் அவர் நன்கு பேட்டிங் செய்தார். அவரிடம் இன்னும் அந்தத் திறமை அப்படியேதான் இருக்கிறது. அவர் எந்த முடிவெடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்பது அவருக்கு நன்கு தெரியும். இதனால், ஓய்வு குறித்த முடிவை அவர்தான் எடுக்க வேண்டும்” எனப் பதிலளித்துள்ளார்.
வாட்சனின் இந்தப் பதில், தோனியின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 2018இல் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வாட்சன் சதம் விளாசியதால் சிஎஸ்கே அணி கோப்பையை வென்று, ஐபிஎல் தொடரில் கம்பேக் தந்தது. அதன் பிறகு, இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியிலும் வாட்சன் ரத்தக் காயங்களுடன் சிறப்பாகப் பேட்டிங் செய்தும் சிஎஸ்கே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணியிடன் தோல்வியடைந்தது.
இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடருக்குப் பிறகு தோனி இன்னும் இந்திய அணிக்காக ஒரு போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது