Categories
அரசியல் மாநில செய்திகள்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு…. ஈபிஎஸ், சசிகலாவுக்கு புது சிக்கல்…!!!

கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ,சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கு தொடுத்துள்ளனர். கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் கடந்த 2017ஆம் வருடம் ஏப்ரல் 24ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அங்கிருந்த சொத்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் தீபு, சயான், மனோஜ், சதீசன் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சசிகலா, இளவரசி, சுதாகரன் நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் சங்கர் முன்னாள் எஸ்பி முரளி ராம்பா, அதிமுக நிர்வாகி ஜீவன், அவரது தம்பி சுனில், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆகியோரை விசாரிக்க உத்தரவிட கோரி குற்றம் சாட்டப்பட்ட சந்தோஷ், தீபு, சதீசன் ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதி அளித்ததுடன் மற்றவர்களை விசாரிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். அதில் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பு குறித்து சயான் பேசிய நிலையில் அதன் தீவிரத்தை பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறி விட்டதாக கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின் நடந்த கொள்ளையில் கொடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசி ஆகியோருக்கு தான் தெரியும். மேலும் புலன் விசாரணை கூட வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை எனவும் முக்கிய குற்றவாளிகளில் விட்டு விட்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |