இரட்டைக் கொலை தொடர்பாக குற்றவாளியை கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு 20000 பவுண்டுகள் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் வெஸ்ட்மினிஸ்டர் பகுதியில் ஆஷ்பிரிட்ஜ் என்னும் தெரு அமைந்துள்ளது. அந்த தெருவில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 19 ஆம் தேதி இரவில் மர்ம நபரால் 45 வயதுடைய ஒரு பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணையில் ஈடுபடும் போது மறுநாள் அதிகாலையில் மற்றொரு அதிர்ச்சியளிக்கும் தகவல் வந்துள்ளது. என்னவென்றால் அதே பகுதியில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் Jerome Crescent என்னும் இடத்தில் உள்ள அடுக்குமாடி வீட்டில் 59 வயதுடைய ஒரு ஆண் மர்ம நபரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த அடுத்தடுத்து வெவ்வேறு பகுதியில் நடந்த இரண்டு கொலைகளையும் ஒரே நபர் செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இது இரட்டை கொலையாகவும் இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகப்படுகின்றனர். இதனையடுத்து இந்த இரண்டு கொலைகளையும் 49 வயதுடைய Lee Peacock என்னும் நபர் செய்திருக்கலாம் என போலீசார் உறுதியாக நம்புகின்றனர். இந்நிலையில் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் Lee Peacock இடம்பெற்றுள்ள காட்சி ஒன்றை லண்டன் மெட்ரோபொலிட்டன் போலீசார் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த காட்சியை பார்த்து Lee Peacock பற்றி தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த வழக்கு குற்றவாளியை கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு 20000 பவுண்டுகள் பரிசாக வழங்கப்படும் என புலனாய்வாளர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.