முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது குறித்து கேரள அரசுடன் தமிழக நீர்வளத்துறை செயலாளர் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். புதிதாக உருவாக்கப்பட்ட நீர்வளத் துறை மானிய கோரிக்கை மீது சட்ட பேரவையில் விவாதம் நடைபெற்றது. இதற்கு அத்துறையின் அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துப் பேசினார், அப்போது பேபி அணையை கட்டி விட்டால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதில் எந்த பிரச்சினையும் வராது என்று கூறினார்.
எனவே இது குறித்து பேசுவதற்காக நீர்வளத்துறை செயலாளர் அடுத்த வாரம் கேரளா செல்ல இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும் அடுத்த 10 ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள் கட்டப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களிலும் 190 தடுப்பணைகள், 4 தரைக்கீழ் தடுப்பணைகள், 6 கதவணைகள், 12 அணைக்கட்டுகள் கட்டப்படும் என அவர் அறிவித்தார்.