கட்டுப்பாட்டை இழந்த வேன் மரத்தின் மீது மோதிய விபத்தில் கிளீனர் பலியான நிலையில் ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் டிரைவரான மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மாரியப்பன் அதே ஊரில் வசிக்கும் கிளீனரான முருகையா என்பவருடன் காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு மதுரையில் இருந்து தென்காசி நோக்கி புறப்பட்டுள்ளார். இதனையடுத்து திருமங்கலம் ஆலம்பட்டி அருகில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மரத்தின் மீது பலமாக மோதி விட்டது.
இந்த விபத்தில் முருகையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை அடுத்து படுகாயமடைந்த மாரியப்பனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.