மூன்று வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் உள்ள பிரித்தானியாவின் மிகவும் பரபரப்பான சாலைகளில் ஒன்று M25 சாலையாகும். அந்த சாலையில் கடந்த 23ஆம் தேதி ஒரு கார், லாரி மற்றும் மினிபஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது தீடிரென Essex-ன் Waltham Abbey டவுன் அருகில் மூன்றும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை கண்ட மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் 2 லண்டன் ஏர் ஆம்புலன்ஸ்கள், 9 ஆம்புலன்ஸ்கள், போலீஸ் மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த பயங்கரமான விபத்தின் காரணமாக அந்த சாலையில் 12 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சிக்கிய 2 ஓட்டுநர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த பயங்கரமான விபத்து குறித்து போலிசார் கூறுகையில் “இந்த விபத்து குறித்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தாலோ அல்லது தகவல்கள் எதுவும் தெரிந்து இருந்தாலோ உடனடியாக தங்களுக்கு தகவல் கொடுங்கள்” என கூறியுள்ளனர்.