குட்டையில் குளிக்க சென்ற சிறுவன் எதிர்பாராவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள லட்சுணநாயுடு தெருவில் முனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பீடி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சபரிநாதன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் மல்லகுண்டா கோயன்கொள்ளை இடத்தில் இருக்கும் குட்டையில் சபரிநாதன் குளிக்க சென்றுள்ளார். இதனையடுத்து குட்டையில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளார்.
அப்போது அவரின் நண்பர்கள் கூச்சலிட்டு அருகில் இருந்தவர்களை அழைத்து வந்து சபரிநாதனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் நெடுநேரம் தேடிய பிறகும் அவரின் உடல் கிடைக்கவில்லை. பின்னர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் படி விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் குட்டையில் மூழ்கிய சிறுவனை சடலமாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.