கோடை விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்த பயணிகளால் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகின்றது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் ஸ்விட்சர்லாந்தில் கடந்த மாதம் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவியுள்ளது. மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. இதனையடுத்து கடந்த மாதம் 1 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 23 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது 160 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் கோடைகாலத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று திரும்பி வந்தவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் ஸ்விட்சர்லாந்தில் உள்ள மாகாணங்களின் சுகாதார மாநாடுகளின் இயக்குநர்கள் எனும் அமைப்பின் தலைவரான Lukas Engelberger என்பவர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்தவர்கள் மீண்டும் தனிமைப்படுத்துதலை அமுல்படுத்துவது குறித்து விரைவாக பேச்சுவார்த்தை நடத்துமாறு வலியுறுத்தியுள்ளார். அதாவது இதற்கு முன் உருவெடுத்த கொரோனாவின் போது மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை தவிர மற்றவைகள் எல்லாம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதே நிலைமை தற்போது ஏற்படலாம் என்ற அச்சம் மக்களிடையே தோன்றியுள்ளது. மேலும் இதற்கு ஆதரவளிப்பது போல் சூரிச்சிலுள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் மருத்துவ இயக்குநராகப் பணியாற்றும் Jürg Hodler மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமானால் அறுவை சிகிச்சைகள் எல்லாம் ஒத்திவைக்கப்படும் நிலைமை உருவாகும் என கூறியுள்ளார்.