கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியான நிலையில், 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள தீவட்டிப்பட்டி சோதனை சாவடி அருகில் சாலையை கடக்க முயன்ற ஒருவர் மீது அவ்வழியாக வேகமாக சென்ற வாகனம் மோதி விட்டது. இந்த விபத்தில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். அப்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் உடலின் மீது அடுத்தடுத்து வாகனங்கள் ஏறி இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் இருந்து ஓசூர் நோக்கி வேகமாக சென்ற கார் விபத்தில் இறந்தவரின் மீது ஏறியதால் திடீரென நிலைதடுமாறி சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது.
அதன் பின் கார் அங்கு நின்ற கண்டெய்னர் லாரி மீது மோதி தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் சிக்கியவர்களை மீட்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் காரில் இருந்த ஒருவர் உடல் கருகி உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து படுகாயமடைந்த மற்ற 4 பேரையும் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.