மின்விளக்கை போட முயன்ற போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கரும்பு ஆலை தொழிலாளர் உயிரிழந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையம் அடுத்துள்ள பிலிக்கல்பாளையம் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் அப்பகுதியில் கரும்பு ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் சேர்ந்த பலரும் இந்த கரும்பு ஆலையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள கொட்டகையில் தங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவத்தன்று இரவு கரும்பு ஆலையில் பணி புரிந்து வரும் மாயவேல் என்பவர் கொட்டகையில் இருந்த மின்விளக்கின் பொத்தானில் போட முயன்றபோது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் மாயவேல் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார்.
இதனை பார்த்த அங்கிருந்த தொழிலாளர்கள் உடனடியாக மாயவேலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாயவேல் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற ஜோடர்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே கடந்த 2 தினங்கள் முன்பு அதே ஆலையில் பணிபுரிந்து வரும் மாதேஸ்வரி என்ற பெண் அதே மின்விளக்கை போட முயன்றபோது மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.