மதுக்கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்த மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை எஸ்.உடுப்பம் சாலையில் மது கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த கடையின் மேற்பார்வையாளராக செல்வக்குமார் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வழக்கம்போல விற்பனையை முடித்துவிட்டு செல்வக்குமார் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக செல்வகுமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற செல்வகுமார் உடனடியாக நல்லிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது விசாரணை நடத்தியதில் மர்மநபர்கள் கடைக்குள் புகுந்து உள்ளே இருந்த லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதை உடைக்க முடியாததால் அங்கிருந்த மதுபாட்டில்களை திருடி சென்றுள்ளனர். மேலும் திருடர்கள் மாட்டிக்கொள்ள கூடாது என்பதற்காக அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களின் வயர்களையும் துண்டித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.