Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் : இர்பான் மீண்டும் சிறையில் அடைப்பு…!!

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மாணவர் இர்பான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யாவிடம் சிபிசிஐடி காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மேலும் சிலர் ஆள்மாறட்ட மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வந்த மாணவர்கள் பிரவீன், ராகுல் ஆகியோரை தேனி சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் இர்பான் என்பவரும் ஆள்மாறாட்டம் செய்திருப்பது தெரியவந்ததையடுத்து இர்பான் தலைமறைவானார். இந்த ஆள்மாறாட்டத்திற்கு முக்கிய காரணமாக கேரளாவைச் சேர்ந்த முகம்மது ரசீத் என்பவர் இடைத்தரகராக செயல்பட்டதும் தெரியவந்தது. இவர்கள் இருவரையும் தேடும் பணியில் சிபிசிஐடி காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதில் மாணவர் இர்பான் அக்டோபர் 1ஆம் தேதி சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அப்போது, இர்பான் சேலத்தில் இருந்து தேனிக்கு கொண்டு வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டார். ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக, மாணவர் இர்பானிடம் ஐந்து நாட்கள் விசாரணை நடத்த சிபிசிஐடி காவல் துறையினர் இன்று தேனி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.

அதனை விசாரித்த தேனி நீதித்துறை நடுவர் நீதிபதி பன்னீர்செல்வம், இன்று ஒரு நாள் மட்டும் விசாரணை நடத்தி நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சிபிசிஐடி ஆய்வாளர் சித்ராதேவி முன்னிலையில் மாணவர் இர்பானிடம் விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கின் விசாரணை அலுவலர் சித்ராதேவி நாளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு செல்லவிருப்பதால் இர்பானிடம் அவசரமாக விசாரணையை முடித்து இன்று இரவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம் மாணவர் இர்பானை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.இதையடுத்து, இர்பான் தேனி மாவட்ட சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும், கடந்த 9ஆம் தேதியில் இருந்து ஐந்து நாள் நீதிமன்றக் காவல் முடிவடைந்து மீண்டும் நாளை தேனி நீதிமன்றத்தில் மாணவர் இர்பான் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |