மின்வாரிய ஊழியர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பு சி.ஐ.டி.யு. சார்பில் தியாகராஜநகர் மின்வாரிய அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் திட்டத் தலைவர் பீர் முகமது ஷா தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் வேலைப்பளு ஒப்பந்தப்படி பயிற்சி காலம் 3 மாதங்கள் என்பதை கேங்க்மேன் பணியிடத்துக்கும் அமல்படுத்த வேண்டும் எனவும், உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 5 ஆயிரம் கேங்க்மேன்களுக்கு உடனடியாக பணி உத்தரவு வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
மேலும் பிற மாவட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள கேங்க்மேன்களை அவரவர் சொந்த மாவட்டங்களில் பணிபுரியும் வகையில் இடமாற்றம் செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பூலுடையார், பாலசுப்ரமணியன், திட்ட செயலாளர் வண்ணமுத்து, மாநில செயற்குழு உறுப்பினர் கந்தசாமி, பொருளாளர் நாகையன், மத்திய அலுவலக கோட்டத் தலைவர் சுடலைமணி, மந்திர மூர்த்தி மற்றும் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.