கலைஞர் நூலகம் அமைய உள்ள இடம் குறித்து ஆதாரமற்ற தகவல்களை கூற வேண்டாம் என அதிமுகவினரை முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜூ, பெனிகுயிக் இல்லத்தை இடித்துவிட்டு கலைஞர் நூலகம் காட்டப்படுவதாக குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அவையில் தவறான கருத்தை செல்லூர் ராஜூ கூறுவதாக தெரிவித்தார். பென்னிகுயிக் மறைவிற்கு பிறகு கட்டப்பட்ட கட்டிடத்தை அவர் வாழ்ந்த இல்லம் என கூறுவது தவறான கருத்து என்றும் தவறான கருத்துக்களை தொடர்ந்து பேச வேண்டாம் என்றும் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின், சட்டப்பேரவையில் பேசும் போது ஆதாரமற்ற தகவல்களை கூற வேண்டாம் என வலியுறுத்தினார். தவறு இருந்தால் திருத்தி கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்த முதலமைச்சர், தவறான கருத்துக்களைக் கூறுவது செல்லூர் ராஜுவின் மதிப்பை குறைத்து விடும் என்றும் கூறினார். ஆதாரம் இல்லாமல் யாரோ கூறுவதாக சட்டப்பேரவையில் கருத்து தெரிவிக்கக் கூடாது என்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தினார்.