நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு குத்தகைக்கு விடும் தேசிய பணமாக்கல் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இதையடுத்து இந்த திட்டத்திற்கு பலரும் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி இந்த திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.
பொதுத்துறை நிறுவனங்கள் என்பவை நாட்டின் சொத்துக்கள். இவை பாஜக கட்சிக்கு சொந்தமானது கிடையாது. நாட்டின் சொத்துக்களை யாரும் உரிமை கொண்டாட முடியாது. இதற்காக பாஜக வெட்கப்படவேண்டும். நாட்டின் சொத்துக்களை விற்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று தெரிவித்துள்ளார். நாட்டின் சொத்துக்களை தனியாருக்கு விடும் திட்டத்திற்கு ராகுல்காந்தியும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.