ஆப்கானிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கு இ-விசா அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றியதை தொடர்ந்து அங்கிருந்து இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் மட்டுமின்றி அங்குள்ள மக்களும் வெளியேற முயற்சி செய்து வருகின்றனர். இந்தியர்களையும், தூதரக ஊழியர்களையும் மீட்டு வர மத்திய அரசு சிறப்பு விமானங்களை அனுப்பி வருகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து இந்தியர்களையும் பத்திரமாக மீட்டு வருவதே அரசின் இலக்கு என்றும், கடைசி இந்தியர் மீட்டு அழைத்து வரப்படும் வரை ஆப்கானிஸ்தானுக்கு விமானங்கள் அனுப்பப்படும் என்றும் மத்திய அமைச்சர் அஜய்பட் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆப்கானிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கு இ-விசா அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறைகள் தொடங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன் எடுக்கப்பட்ட விசாக்கள் அனைத்தும் உடனடியாக ரத்து செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானியர்கள் பலரின் விசாக்கள் காணாமல் போனதாக கிடைத்த தகவலை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த தாலிபான் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் ஆப்கானிஸ்தானிகள் சொந்த நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து கவலை தெரிவித்தார். ஆப்கானில் படித்தவர்கள் சொந்த நாட்டிற்கு சேவை செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார். அரசு பணிகளில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார். அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் தீவிரவாத குழுக்கள் ஆப்கான் மண்ணை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.