அமெரிக்க நாட்டின் சராசரி குடும்ப வருமானம் மற்றும் பட்டதாரிகளின் எண்ணிக்கையில் அமெரிக்க மக்களை விட இந்திய வம்சாவளியினரே அதிகமாக உள்ளனர்.
அமெரிக்க நாட்டில் இந்திய மக்கள் 40 லட்சம் பேர் வசிக்கிறார்கள். இதில், 16 லட்சம் மக்கள் விசா வைத்திருக்கின்றனர். மேலும், 14 லட்சம் மக்கள், இயற்கையான குடியிருப்பாளர்களாக இருக்கிறார்கள். மீதமுள்ள 10 லட்சம் மக்கள் அந்நாட்டிலேயே பிறந்தவர்கள். இந்நிலையில் சமீபத்தில், நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய நடுத்தர குடும்பங்களின் வருட வருமானம், 1,23,700 டாலர். இந்திய மதிப்பில் 93 லட்சம். இது, அந்நாட்டின் தேசிய சராசரி வருவாயை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்க மக்களை காட்டிலும் இந்திய மக்களே அதிக வருவாய் பெறுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது.
இது மட்டுமல்லாமல், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய மக்களில் 79% பேர் பட்டதாரிகள். இதில் நாட்டின் தேசிய சராசரி 34% தான். மேலும், ஆசிய நாடுகளிலேயே, அதிக வருவாய் பெறுவது, இந்திய மக்கள் தான். அமெரிக்காவில் வசிக்கும் இந்திய நடுத்தர குடும்பத்தினர், 1,23,700 டாலர்கள் வருவாய் ஈட்டும் நிலையில், தைவான் நாட்டு மக்கள் 97, 129 டாலர்களும், பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் 95,000 டாலர்களும் வருவாய் பெறுகிறார்கள்.