அமெரிக்காவின் சிஐஏ தலீபான்களின் முக்கிய தலைவரை ரகசியமாக சந்தித்து பேசியதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து தலீபான்களின் ஆதிக்கம் அங்கு அதிகரித்துள்ளது. அதனால் உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் கூடியுள்ளனர். இதனையடுத்து தலீபான்கள் புதிய ஆட்சி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டு மக்களை மீட்பதற்காக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியா உட்பட பல நாடுகள் செயல்பட்டு வருகின்றது. இந்த மீட்பு பணிக்காக அமெரிக்கா காபூல் விமான நிலையத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அதன்பின் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற்றபடுவார்கள் என உறுதியளித்துள்ளார்.
அந்த ஒப்பந்தத்தின்படி குறித்த தேதிக்குள் அமெரிக்கப் படைகள் வெளியேறவில்லை என்றால் போர் நடத்தப் போவதாக தலீபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகளை மீட்பதற்கு கூடுதல் கால அவகாசம் ஏற்படலாம் என ஊடகம் ஓன்று தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் உளவுத்துறை தலைவர் வில்லியம் பர்ன்ஸ் தலீபான்களின் முக்கிய தலைவரான முல்லா அப்துல் கானியை கடந்த 23 ஆம் தேதி காபூலில் வைத்து இரகசியமாக சந்தித்துள்ளார். அந்த சந்திப்பில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா மற்றும் பிற நாட்டு மக்களை மீட்பதற்கு வரும் 31 ஆம் தேதிக்கு பின்னரும் கால அவகாசத்தை நீட்டிப்பது மற்றும் பல விஷயங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.