கொரோனா பரவலின் காரணமாக 20 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயண தடையை சவூதி அரேபியா நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் உலகம் முழுவதும் கொரோனா அதிக அளவில் பரவியிருந்தது. அப்போது சவூதி அரேபியா ஐக்கிய அமீரகம், எகிப்து, அமெரிக்கா, பிரித்தானியா, ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து மற்றும் பிரான்ஸ் உட்பட 20 நாடுகளுக்கு பயணத்தடை விதித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “கொரோனா பரவல் தற்போது குறைந்துள்ளதால் 20 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படுவார்கள்” என அறிவித்துள்ளது.
எனினும் டெல்டா மாறுபாடு காரணமாக பல நாடுகளில் கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வருகின்றது. மேலும் ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் குழு தகவல் தெரிவித்துள்ளது. அதன்பின் சவூதி அரேபியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் தேதி முதல் விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடப்பாண்டில் கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் தேதி சவூதி அரேபியா தனது எல்லைகளை திறந்துள்ளது.