கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் என்ஜினீயர் பெண் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள தீவட்டிப்பட்டி யில் கடந்த 23-ஆம் தேதி சாலையை கடக்க முயன்ற போது பிச்சைக்காரர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார். இந்நிலையில் இறந்தவரின் சடலம் மீது ஏறி இறங்கிய போது நிலைதடுமாறிய கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது வேகமாக மோதி பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே தனியார் நிறுவன ஓய்வுபெற்ற மேலாளரான பொன்மலை என்பவர் உடல் கருகி இறந்து விட்டார்.
இதனையடுத்து படுகாயமடைந்த அவரது மனைவியான சகுந்தலா, மகள்கள் நித்திய குமாரி, ஷோபனா மற்றும் ஷோபனாவின் குழந்தை போன்றோரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சகுந்தலா பரிதாபமாக இறந்துவிட்டார். இதனைத்தொடர்ந்து பெங்களூருவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்த நித்தியகுமாரியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. மேலும் மற்ற இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.