போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பாலமுருகன் என்பவர் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துவிட்டனர். கடந்த 23-ஆம் தேதி சிறையில் இருந்த பாலமுருகனுக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டதால் அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் பாலமுருகனுக்கு ஆயுதப்படை போலீஸ்காரர்களான மணிகண்டன், விக்னேஷ், பசுபதி, உதயகுமார் ஆகிய 4 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து கழிவறைக்கு போவதாக கூறி விட்டு சென்ற பாலமுருகன் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி பார்த்துள்ளனர். அப்போது அரசு மருத்துவமனையில் இருந்து பாலமுருகன் தப்பி ஓடியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போதும் பாலமுருகனை கண்டுபிடிக்க இயலவில்லை. இதனால் தனிப்படை காவல்துறையினர் பாலமுருகனை தீவிரமாக தேடி வருகின்றனர்.