சிறுத்தை நாயை கவ்வி சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூசைபுரம், பீம்ராஜ் நகர், மல்குத்திபுரம் போன்ற கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் இருக்கும் கல்குவாரியில் பதுங்கியிருக்கும் சிறுத்தை கால்நடைகளை வேட்டையாடி கொண்டிருக்கிறது. இதுவரை இந்த சிறுத்தை அப்பகுதியில் இருக்கும் 20-க்கும் மேற்பட்ட நாய்கள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட ஆடுகளை வேட்டையாடியுள்ளது. இந்த சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். ஆனாலும் சிறுத்தை அதில் சிக்கவில்லை. இந்நிலையில் சூசைபுரம் கிராமத்தில் வசிக்கும் பழனிச்சாமி என்பவர் காவலுக்காக இரண்டு நாய்களை வளர்த்து வந்துள்ளார்.
இதனை அடுத்து இரவு நேரத்தில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டதால் பழனிச்சாமியின் குடும்பத்தினர் வெளியே சென்று பார்த்துள்ளனர். அப்போது சிறுத்தை ஒரு நாயை கவ்விக்கொண்டு வனப்பகுதிக்குள் சென்றதை கண்டு பழனிச்சாமியின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுத்தையின் கால் தடத்தை ஆய்வு செய்துள்ளனர். இவ்வாறு ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடும் சிறுத்தையை விரைவாக பிடிப்பதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.