சாதியின் பெயரைக்கூறி பட்டதாரியை தாக்கிய இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள கட்டனாச்சம்பட்டி காலனியில் விஜய் என்பவர் வசித்து வந்துள்ளார். பட்டதாரியான இவர் தனது நண்பர்களுடன் கைப்பந்து விளையாடுவது வழக்கம். இந்நிலையில் இவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது அதே பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் மற்றும் புது பாளையத்தை சேர்ந்த சூர்யா ஆகியோரும் விஜயுடன் விளையாட வந்துள்ளனர். இதனையடுத்து நேற்று முன்தினம் விஜய் புதுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த சூர்யா மற்றும் ஆனந்தராஜ் விஜய்யின் ஜாதி பெயரை கூறி தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த விஜய்யை அங்கிருந்தவர்கள் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்து விஜய் ராமநாதபுரம் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சரவணன் எஸ்.சி., எஸ்.டி. ஆகிய பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து ஆனந்தராஜ் மற்றும் சூர்யாவை கைது செய்துள்ளனர்.