அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதங்கள் பண்டிகை காலம் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடனும், கொரோனா விதிமுறைகளை கடைபிடித்தும் பண்டிகையை கொண்டாடுங்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மத்திய மாநில அரசுகளின் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தற்போதுதான் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் மராட்டியம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் தொற்று குறைந்தபாடில்லை. இந்நிலையில் அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பண்டிகை காலம் என்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: “நாடு முழுவதும் இரண்டாவது அலைய இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால் மக்கள் பண்டிகை காலங்களில் எச்சரிக்கையுடன் கொண்டாட வேண்டும். அதுவும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் முக்கியமானவை. இந்த காலகட்டத்தில் பண்டிகைகள் அதிகளவில் வருவதால் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் கொண்டாட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.