உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவல்துறையை சீர்திருத்தம் செய்வது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. மேலும், இதுவரை எடுக்கப்பட்ட காவல் துறை சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசும், காவல்துறை இயக்குநரும் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி தாக்கல் செய்த பதில்மனுவில், காவல் துறையில் சீர்திருத்தங்கள் செய்வது தொடர்பாக ஆய்வு செய்ய நான்காவது காவல் ஆணையம் அமைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும், காலி பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி மற்றும் நீதிபதி சரவணன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. உள்துறை செயலாளரின் பதில்மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள், காவல் ஆணையம் அமைப்பது, கலவரங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விதிகள் வகுப்பது, காவல் துறையில் காலி பணியிடங்களை நிரப்புவது, காவலர்களுக்கு பயிற்சி வழங்குவது என தனித்தனியாக அறிக்கை அளிக்கும்படி, உள்துறை செயலருக்கு உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.