வங்கிகளில் போதிய பணமில்லாத காரணத்தினால் மக்கள் ஏமாற்றம் அடைந்து சென்றனர்.
ஆப்கானில் 20 ஆண்டுகளாக தங்கியிருந்த அமெரிக்கா நேட்டோ படைகள் வெளியேறுவதை அடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் தலீபான்கள் தலைநகர் காபூல் மற்றும் முக்கிய இடங்களை கைப்பற்றி தங்களின் அதிகாரத்தை நிலை நாட்டியுள்ளனர். மேலும் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளதால் அங்குள்ள பெரும்பாலான வங்கிகள் மூடப்பட்டன. இதனால் மக்களுக்கு பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பத்து நாட்களுக்கு பிறகு மீண்டும் வங்கி செயல்பாடுகள் தொடங்கியுள்ளன. அதனால் மக்கள் தங்கள் கணக்கில் இருக்கும் சேமிப்பு பணத்தை எடுப்பதற்காக வங்கி முன் குவிந்துள்ளனர்.
இதன் காரணமாக வங்கியின் முன் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து வங்கியில் போதிய பணம் இல்லாததால் மக்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஏற்கனவே ஆப்கானில் உள்ள மத்திய வங்கி அமெரிக்காவில் உள்ள மத்திய வங்கியில் 7 பில்லியன் டாலர்கள் மற்றும் தங்கத்தை சேமித்து வைத்துள்ளது. இதனை அமெரிக்கா அரசு முடக்கியது. இதே போன்று ஆப்கானிஸ்தானுக்கு இந்த வாரம் கொடுக்க வேண்டிய 430 மில்லியன் டாலர்களை சர்வதேச நிதி மையம் நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.