அமெரிக்கா படைகள் வெளியேறிய பின்னும் ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று தலீபான்கள் கூறியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனையடுத்து தலீபான்கள் புதிய ஆட்சி அமைக்கப் போவதாக கூறி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பயந்து ஆப்கானில் இருந்து தப்பிச் செல்கின்றனர். மேலும் அமெரிக்கா, இந்தியா ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்களை விமானம் மூலம் ஆப்கானில் இருந்து பாதுகாப்பாக மீட்டு வருகின்றனர். இதனால் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு அங்கேயே காத்துக் கிடக்கின்றனர். இதனால் அங்கு ஒரு விதமான பதற்றம் நீடித்து வருகிறது. இருப்பினும் அமெரிக்கா தனது போர் விமானங்கள் மூலம் ஆப்கான் நாட்டை சேர்ந்தவர்களையும், அமெரிக்கா குடிமக்களையும் மீட்டு வருகிறது.
அதிலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கா படைகள் நாட்டை விட்டு வெளியேறுவர் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார். மேலும் அன்றே அமெரிக்கா குடிமக்களை ஆப்கானில் இருந்து மீட்கும் பணிகளும் நிறைவடையும் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து அமெரிக்கா படைகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டால் ஆப்கானில் இருந்து வெளியேற விரும்பும் மக்களின் நிலை என்னவாகும் என்று கேள்வி எழுந்தது. அதிலும் தலீபான்கள் ஆப்கானியர்களை வெளியேற்ற விடமாட்டார்கள் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி அன்று அமெரிக்கா படைகள் திரும்ப பெறப்பட்டாலும் ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தலீபான்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை ஜெர்மனி தூதர் உறுதி செய்துள்ளார். குறிப்பாக ஆப்கானிஸ்தானில் கல்வி, மருத்துவம், விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.