கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திம்மராஜபுரம் பகுதியில் இசக்கிமுத்து என்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு சேர்மன் என்ற அண்ணன் உள்ளார். இவர் அந்த பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இசக்கிமுத்து மற்றும் சேர்மன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் இசக்கிமுத்துவை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதனை தடுக்க முயன்ற சேர்மனையும் அரிவாளால் வெட்டினார்கள். இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த இசக்கிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் திம்மராஜபுரம் பகுதியில் வசிக்கும் நம்பி நாராயணன், மாணிக்கராஜ், சுந்தரபாண்டியன், ஸ்ரீராம் குமார், பழனி ஆகிய 6 பேரும் கொலையில் ஈடுபட்டது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 6 பேரையும் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அதில் சுந்தர பாண்டியனின் மனைவியை இசக்கிமுத்து அடிக்கடி கேலி கிண்டல் செய்து வந்துள்ளார். இதனை சுந்தரபாண்டியன் பலமுறை கண்டித்தும் இசக்கிமுத்து தொடர்ந்து கிண்டல் செய்து வந்துள்ளார். இதனால் இசக்கிமுத்து மீது சுந்தரபாண்டியன் கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சுந்தரபாண்டியன் தனது நண்பர்களான நம்பி நாராயணன் உள்ளிட்ட 5 பேருடன் இசக்கிமுத்துவை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்பின் அவர்கள் 6 பேரும் இசக்கிமுத்துவை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.