தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தாப்பாத்தி இலங்கை அகதி முகாமில் கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதியன்று தூத்துக்குடி மக்களவை உறுப்பினர்- திமுக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி பார்வையிட்டார். இதையடுத்து அங்குள்ள மக்கள் பல வருடங்களாக இருள் சூழ்ந்திருந்த வாழ்விற்கு வெளிச்சம் கொடுப்பதற்காக வந்திருக்கிறார் என்று கனிமொழியை கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர். கனிமொழியும் முகாமில் வசிக்கும் மக்களோடு பாசத்தோடு பேசி அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டார்.
மேலும் அங்கு வசிக்கும் 457 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணமாக 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கினார். பிறகு அங்கு வசித்து வரும் குடும்பங்கள் தங்களுக்கு தேவையான கழிப்பறை வசதிகள், கூடுதலாக குப்பைத் தொட்டிகள், தண்ணீர் தேக்க தொட்டிகள் ஆகியவற்றை அமைத்து தருமாறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதையடுத்து கனிமொழிஅவர்களுடைய கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து இன்று சட்டப்பேரவையில் இலங்கை தமிழர்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக முதல்வர் பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்திருக்கிறார். இதனால் கனிமொழி வந்து தங்களது துயரை பார்த்து அவருடைய அண்ணனும், முதல்வருமான ஸ்டாலினிடம் கூறி இந்த திட்டங்களை கொண்டு வந்துள்ளார் என்று அவர்கள் இருவருக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.