இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் முக ஸ்டாலின், இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும். முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பணக்கொடை வழங்கப்படுகிறது. இந்த பணக்கொடை உயர்த்தி வழங்கப்படும். இலங்கை தமிழ் அகதிகளுக்கு ரூ.108 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும்.
இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது, சொந்த நாட்டிற்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் என உள்ளடக்கிய குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இதுகுறித்து பதிவிட்ட திமுக எம்பி கனிமொழி, “வாழ்விடம் இழந்து, வாழ்விழந்து, நாடு இழந்து, தன்னுடைய எதிர்காலம், தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலம் எல்லாம் கேள்விக்குறியாக்கப்பட்ட நிலையில் முகாம்களில் அடிப்படை வசதிகூட இல்லாமல் பரிதவித்த இலங்கை தமிழ் மக்களுக்கு எதிர்காலத் திட்டங்களையும், கவுரமான வாழ்க்கையும் அறிவித்திருக்கும் முதல்வர் அவர்களுக்கு நன்றி. கண்ணீர் கடலில் திசையறியாது தவித்தவர்களுக்கு திசைமானிய அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.