ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. எனவே விசாரணையை விரைந்து முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அம்மா அவர்களுடைய மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும் .2017 ஆம் வருடம் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து அம்மாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தோம்.
இதையடுத்து 2017 செப்டம்பர் 25-ஆம் தேதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 90% விசாரணை முடிவுற்ற நிலையில் இரண்டு ஆண்டு நீதிமன்ற தடை காரணமாக எதுவுமே நடக்கவில்லை. இந்நிலையில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அம்மா இறப்பில் உள்ள மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு தப்பு செய்தவர்கள் எவராயினும் தண்டனை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் இதில் தனிக்கவனம் செலுத்தி உச்ச நீதிமன்றத்தில் உள்ள தடையை நீக்கவும், ஆணையத்தின் அறிக்கையை விரைவில் சமர்பிக்க செய்யவும், அம்மா மரணத்தில் உள்ள சந்தேகத்தை தீர்த்து வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.