நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் கோவிஷீயீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதனால் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று இந்தியா 61 கோடி தடுப்பூசிகள் என்ற இலக்கை எட்டியதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முதல் முறையாக ஒரே நாளில் ஒரு கோடியே 2 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 62 கோடியை எட்டி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 14 கோடி பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசின் கோ-வின் இணையதளத்தில் பதிவாகியுள்ளது. இவ்வாறு ஒரு கோடி தடுப்பூசி போடப்பட்டு சாதனை படைத்ததற்கு பிரதமர் மோடி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.