மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டபேரவையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். தமிழ்நாடு அரசின் தனி தீர்மானத்தை பேரவையில் முதல்வர் முன்மொழிந்தார். அதில், 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். 3 சட்டங்களும் நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கு உகந்ததாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் கொண்டு வந்ததை கண்டித்து அதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதிமுக மற்றும் பாஜக வெளிநடப்பு செய்ததால் மற்ற கட்சிகள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் எம்எல்ஏக்கள் வேல்முருகன், ஜவாஹிருல்லாவின் கோரிக்கையை ஏற்று அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.