9 வயதுடைய மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாகித் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் விளையாட சென்ற சாகித் மாலை நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அச்சமடைந்த சாகித்தின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து காவல்நிலையத்தில் அவரின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் சாகித் நீர்நிலைக்கு குளிக்க சென்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கிராமத்தை சுற்றி இருக்கும் நீர்நிலைகளில் காவல்துறையினர் சாகித்தை தேடி வந்துள்ளனர். அப்போது அங்கிருக்கும் பெரிய ஏரியின் தண்ணீரில் சாகித் பிணமாக மிதந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர்.
இதனைக் அறிந்து வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாகித்தின் உடலை பார்த்து கதறி அழுதனர். பிறகு காவல்துறையினர் சாகித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து சாகித் ஏரியில் குளிக்க சென்ற போது எதிர்பாராவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் சாகித்தின் சாவுக்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என பல கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.