தேனீக்கள் கொட்டியதால் தொழிலாளி உயிரிழந்த நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குரும்பபாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான ரமேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் ரமேஷ் குமார் தனது தந்தையான முருகன் மற்றும் உறவினர்களுடன் 16-வது நாள் திதி கொடுப்பதற்காக ஆழியாற்றுக்கு சென்றுள்ளனர். இதனை அடுத்து திடீரென மலை தேனீக்கள் கூட்டமாக பறந்து வருவதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
ஆனாலும் மலை தேனீக்கள் அவர்களை கொட்டியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ரமேஷ்குமார் பரிதாபமாக இறந்து விட்டார். இதனையடுத்து காவல்துறையினர் ரமேஷ் குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் தேனீக்கள் கொட்டியதால் அங்கிருந்த 20 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் யாகம் செய்வதற்காக தீமூட்டியதால் தேனீக்களின் கூடு கலைந்து அவை பறந்து வந்து கொட்டியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.